Monday, July 18, 2011

தெய்வத்திருமகள்நிலாவின் நடிப்பு. . . ஒவ்வொரு நொடியும் அட்டகாசம்! என்று சொல்ல இயலாமல் தடுமாறும் போதும், தன் தாயைப் பற்றி தந்தையிடம் கேட்கும் போதும், நிலவுடன் பேசும் போதும் நம்மை மெய் மறக்கச் செய்பவள், கோர்ட் காட்சியில் விக்ரமுடன் இணைந்து நம்மை நிலைகுலையச் செய்கிறாள். விருதுகள் வண்டி கட்டி வருவது நிச்சயம்.

கிருஷ்ணாவாக விக்ரம். ஆரம்ப காட்சிகள் நம் பொறுமையை சோதித்தாலும், சிறிது நேரத்திலேயே சிறை பிடிக்கிறார். நிலாவிற்கு கதை சொல்வது, தண்ணீர் குழாயை அடைப்பது, சிக்னலை கவனிப்பது, மருந்து வாங்குவது போன்ற காட்சிகளில் உயர்த்திக் காட்டப்படும் கிருஷ்ணாவின் மனநிலை, அவருடைய மாமனாரைத் தவிர நம் அனைவருக்கும் புரிகிறது.

அழகான அனுஷ்கா.... அவருக்கே தெரியும், தமிழில் இதுதான் அவரது பெஸ்ட் என்று. கிருஷ்ணா/நிலா-விற்காக போராடும் போது நம் பாராட்டைப் பெறும் அவர், 'விழிகளில்...’ பாடலில் நம் கண்களையும், இதயத்தையும் திருடிச் செல்கிறார்.

சிறிது கனம் பொருந்திய வேடத்தில் சந்தாணம். இருந்தாலும் கிடைக்கும் போதெல்லாம் வெடியாய் சிரிக்க வைக்கிறார். கதையோடு ஒன்றிய காமெடி, பலம்.

'மைனா' அமலா பால். மைனா - அளவிற்கு வேலை இல்லை என்றாலும், அமைதியாய், அழகாய் வந்து செல்கிறார். குறிப்பாய், ‘Correspondent'-ஆக படபடக்கிறார்.

இவர்கள் தவிர, நாசர், மகேந்திரா உட்பட அனைவரும் தங்கள் வேலையை சரிவர செய்திருக்கிறார்கள்.

ஒரு அழகான கதையை, அனைவரும் ரசிக்கும் விதத்தில் விருந்தாய் தந்திருக்கிறார் இயக்குனர் விஜய். அவரது பங்களிப்பை படம் பார்த்துத் தான் உணர வேண்டும்.அபாரம்.

இந்தப் படத்தின் பெறும் பலம் இசை. G.V.பிரகாஷ் பிண்ணனியில் ப்ரமாதப்படுத்திவிட்டார்.காதின் வழியாய் உள்ளத்தில் நுழைந்து, கண்களில் நீரைக் கரைய விடுகிறார்.

பாஸ்கரும், அவரின் கெட்டப்பும், அவருடைய கதாபாத்திர உருவாக்கமும்... ஏமாற்றம்.

'விழிகளில் ஒரு வானவில்...’ பாடல் வரிகள் அருமை என்றால், அதன்  வண்ணம் அபாரம்; அனுஷ்கா ஜொலிக்கிறார். அனுஷ்காவின் எண்ணங்களை கோடிட்டுக் காட்டி, அந்த எண்ணங்களின் முடிவை நம்மிடமே விட்டு விட்டது கவிதை.

இப்படத்தின் சுருக்கத்தை ஒற்றை வரி இசையில் கொடுத்திருப்பது தான் ‘Life is Beautiful‘ன் சிறப்பு. அதிலும் பிற்பகுதியில் வரும் ‘வயலின்’ இசை, நம் இதயத்துடிப்பு!!!

சிறந்த படங்களைப் பார்த்தவுடன், அத்தகைய எண்ண ஓட்டம் கொண்ட என் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து, படம் பார்க்கச் சொல்வது என் வழக்கம். இந்தப் படத்தைப் பார்க்குமாறு பலருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், படம் முடிந்தவுடன் நண்பன் ‘ஜோ’வை அழைத்த போது, என்னால் பேச இயலவில்லை. வார்த்தைகள் தத்தளித்தன.

‘படம் போய் பார்’ என்று மட்டுமே கூற முடிந்தது. அந்த நொடி கூறிற்று ‘தந்தை-மகள் உறவைக் கூறிய மிகச்சிறந்த படமென்று’!  'அன்பை உரக்கச் சொல்லிய மிகச்சிறந்த படமென்று’!!

இத்திரைப் படத்தின் வெற்றி விழாவிற்கும், விருது விழாக்களுக்கும் வாழ்த்துக்கள்..!

~ ப்ரியமுடன், 
பாலா

1 comment:

 1. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete