Sunday, May 30, 2010

அடப்போங்கப்பா - 1 இந்தியக்குடிமகன்


பத்து ரூபாய்க்கு ‘பரவாயில்லை’ ரக அரிசி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், இன்று ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி 'பிரமாதமான’ சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்;

வரைமுறை இல்லாமல் தரப்படும் ‘ஓசி’ டிவி வாங்கி, அப்பொழுதே விற்று, அந்தக் காசில் அடுத்த மாத வடகையை அட்ஜஸ்ட் செய்கிறான்;

அட, கிடைப்பதே ஒரு நாள் விடுமுறை, அன்றும் வரிசையில் நின்று அப்படி ஓட்டுப் போட்டுத்தான் ஆகவேண்டுமா என தூங்கிக் கழிக்கிறான்;

வீட்டின் குடைச்சல், கடன் தொல்லை, அலுவலகச் சுமை என அனைத்தையும் ஒரு ‘குவாட்டரில்’அப்போதைக்கு கரைத்து விடுகிறான்;

அதே ‘அரசு’ மதுபானக்கடையில் தன் ’பட்டதாரி’ தம்பிக்கு அரசு ‘வேலை’ போட்டு கொடுத்ததும், ‘சந்தோசத்தில்’ இன்னொரு ரவுண்டு விடுகிறான்;

பேருந்து, மின்சாரம் என எங்கு அதிகக் கட்டணம் கேட்டாலும், விதியே என கேள்வி கேட்காமல் கொடுத்து விடுகிறான்;



ஆக, ’நிலையான அரசு’, ’போக்குவரத்துத் துறையில் லாபம்’, ’சாராயத் துறையில் லாபம்’, ‘மின்சாரத் துறையில் லாபம்’ எனப் பல பெருமைகளை வழங்கி, தான் அழிந்து கொண்டிருக்கிறான்;

அவன் தான் ‘சாதாரண குடிமகன்’ - ஓ, மன்னியுங்கள்; ‘சதா’-’ரண’-’குடி’மகன் !


அடப்போங்கப்பா.... நீங்களும் உங்கள் அரசாங்கமும்!!


~ ப்ரியமுடன்,
பாலா

Tuesday, May 25, 2010

நட்பு



என் ஆருயிர்த் தோழி ஒருத்தி, அழகாய் வளர்த்தாள் தன் விரல் நகத்தை;

அது அவளுக்கும், அவள் அதற்குமென அழகு சேர்த்துக் கொண்டனர்;

சட்டென்று ஒரு நாள், பட்டென்று அதனை வெட்டி எறிந்துவிட்டாள்.

காரணம் கேட்டேன்; ’பிடிக்கவில்லை’ என்றாள்.

மற்றொரு நாள், என் நட்பையும் அவ்வாறு வெட்டி எறிந்த போதுதான்
உணர்ந்தேன்
- அந்த நகம் எவ்வளவு துடித்திருக்குமென்று...!


-ப்ரியமுடன்,
பாலா
(கல்லூரிக் காலத்தில் எழுதியது)

Friday, April 23, 2010

அன்புள்ள சச்சின் . .




நம் தலைமுறைக்கும், நம் முந்தைய பிந்தைய தலைமுறைக்கும் இந்தநாள் வருடத்தில்
ஆனந்தம் தரும் நாள் ..
ஆம், நம் அன்பு சச்சினின் பிறந்தநாள் .. அவரைப்பற்றி பலமுறை கேட்டாலும் , படித்தாலும் இன்னும் ஒரு முறை பேச மனம் படபடக்கும்.

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியைப்பற்றி கேள்விபட்டாலும், இப்போது தான் பார்க்கிறோம் இந்திய கிரிக்கெட்டின் அமுத சுரபியை - சச்சின் வடிவத்தில்.!!

சச்சினின் கடந்த கால சாதனைகளைக் காட்டிலும், நிகழ்காலச் சாதனைகள் நம்மை பிரம்மிக்க
வைக்கின்றன. ஏனென்றால், வயதால் உடல் தளர்ந்தாலும் மனம் தளராத சாதனைகளே
மனிமகுடத்தின் வைரங்களாய் மின்னும்.

"இங்குள்ள ரசிகர்கள் சென்னை வெல்ல வேண்டும் என்று விரும்பினாலும், சச்சின்
சதம் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்" என்று சென்னை/மும்பை ஐபிஎல் போட்டியில் கவாஸ்கர் சொன்னது எவ்வளவு உண்மை !!

கடந்த ஒரு வருடமாய் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்
சச்சின், இந்த வருடமும் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று
"சுயநலத்துடன்" இறைவனை வேண்டுகிறேன்..!
~ ப்ரியமுடன்,
பாலா


வணக்கம்


எல்லோரும்தான் எழுதுகிறார்கள், நாம் என்ன செய்ய என்று எழுதிவிடத் தோன்றவில்லை.

நமக்கு எதற்கு இந்த வீண் வேலை என்று சும்மா இருந்து விடவும் முடியவில்லை.

நண்பர்களுக்காக தொடங்கிவிட்டேன். . . உங்கள் வாழ்த்துக்களுடன் !

அடடே . . . சொல்ல மறந்துவிட்டேன் . . . வணக்கம் !!

அடிக்கடி (??? !!) சந்திப்போம்; முடிந்தால் சிலவற்றை பற்றி ஆலோசிப்போம்; சிந்திப்போம்;

~ ப்ரியமுடன்,
பாலா