Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, August 14, 2010

அடப்போங்கப்பா - 2 உள்நாட்டு தீவிரவாதம்






”டமால். .. ... ”




கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்க

காத்திருந்த காதலன்,


காதலுடன் கண்களால் தேனிலவு

கொண்டாடிய புதுமணத் தம்பதியர்,


அவசர சிகிச்சைக்காக அன்னையின்

அரவணைப்பில் சென்ற பாலகன்,


ஆச்சரியம் தர ஒரு மாத விடுமுறையில்

ஆடம்பரமாய் சென்ற நகரத்து ஊழியன்,


முதல் கூடைப் பூவையாவது முழுவதுமாய்

விற்றுவிட முயன்ற மூதாட்டி,


மூத்த மகனின் வீட்டிலிருந்து அடுத்த மாத உணவிற்கு

இளைய மகன் வீட்டிற்கு சென்ற பெற்றோர்,



- என அனைவரின் கனவுகளும், வாழ்க்கையும்

முடிந்து போனது,



அவர்களுக்கு இருந்த, இல்லாத உறவினர்,

நண்பர் நிம்மதியும் முற்றும் பெற்றது,



நீங்கள் ஒற்றைத் தண்டவாளக் கட்டையை உருவியதால்!!





போராளி என்றோ, நக்சல் என்றோ,

மாற்றுக் குழு என்றோ, மாவோயிஸ்ட் என்றோ


பலபேர் பலவாறு உங்களை அழைக்கலாம்,



முன்னாள் நடிகையோ, மூத்த பத்திரிக்கையாளரோ

முழுவதுமாய் உங்களை ஆதரிக்கலாம்,



மாநில அரசுகள் தங்களைக் காப்பாற்ற

மத்திய அரசைச் சாடலாம்,



மத்திய அமைச்சரவை கூடி

அதிரடி நடவடிக்கை வேண்டும் என்றும்,

மண்ணின் மைந்தர்கள் மீது

ராணுவ நடவடிக்கை கூடாது என்றும்,

விவாதித்து முடிவு ஏதும்

எடுக்காமல் முடிந்தும் போகலாம்.




ஆனால் ஒன்று. . . .



கேட்க நாதியற்ற சராசரி இந்தியனையோ,

கடைநிலையில் உள்ள ராணுவ வீரனையோ,


நீங்கள் குறி வைக்கும் வரை

உங்களுக்கு கவலையில்லை.



தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ

மாநில மத்திய அரசியல்வாதியையோ

தீண்டி விடாதீர்கள். . . .



பின்னர் மாநில மத்திய

காவல்துறைகள் மட்டுமன்றி

சிறப்பு அதிரடிப் படைகளும்

உள்நாட்டு வெளிநாட்டு ராணுவமும்

உங்களைத் தேடக் கூடும்...


சர்வதேசத் தீவிரவாதியென

அறிவிக்கக் கூடும்...


உங்கள் தாய்தந்தையரையும்,

உற்றார் உறவினரையும்,

வெளிநாடு செல்லவோ

உள்நாடு திரும்பவோ

அனுமதி மறுக்கக் கூடும்...



ஆகவே ஆன்றோரே சான்றோரே....


மறந்து விடாதீர். .

மறந்தும் இருந்து விடாதீர். .



தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ

மாநில மத்திய அரசியல்வாதியையோ

தீண்டி விடாதீர்கள். . . . !!



அடப்போங்கப்பா நீங்களும்

உங்கள் கோட்பாடுகளும்.. . .!!!!

 
 
 
~ ப்ரியமுடன்,


பாலா

Sunday, May 30, 2010

அடப்போங்கப்பா - 1 இந்தியக்குடிமகன்


பத்து ரூபாய்க்கு ‘பரவாயில்லை’ ரக அரிசி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், இன்று ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி 'பிரமாதமான’ சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்;

வரைமுறை இல்லாமல் தரப்படும் ‘ஓசி’ டிவி வாங்கி, அப்பொழுதே விற்று, அந்தக் காசில் அடுத்த மாத வடகையை அட்ஜஸ்ட் செய்கிறான்;

அட, கிடைப்பதே ஒரு நாள் விடுமுறை, அன்றும் வரிசையில் நின்று அப்படி ஓட்டுப் போட்டுத்தான் ஆகவேண்டுமா என தூங்கிக் கழிக்கிறான்;

வீட்டின் குடைச்சல், கடன் தொல்லை, அலுவலகச் சுமை என அனைத்தையும் ஒரு ‘குவாட்டரில்’அப்போதைக்கு கரைத்து விடுகிறான்;

அதே ‘அரசு’ மதுபானக்கடையில் தன் ’பட்டதாரி’ தம்பிக்கு அரசு ‘வேலை’ போட்டு கொடுத்ததும், ‘சந்தோசத்தில்’ இன்னொரு ரவுண்டு விடுகிறான்;

பேருந்து, மின்சாரம் என எங்கு அதிகக் கட்டணம் கேட்டாலும், விதியே என கேள்வி கேட்காமல் கொடுத்து விடுகிறான்;



ஆக, ’நிலையான அரசு’, ’போக்குவரத்துத் துறையில் லாபம்’, ’சாராயத் துறையில் லாபம்’, ‘மின்சாரத் துறையில் லாபம்’ எனப் பல பெருமைகளை வழங்கி, தான் அழிந்து கொண்டிருக்கிறான்;

அவன் தான் ‘சாதாரண குடிமகன்’ - ஓ, மன்னியுங்கள்; ‘சதா’-’ரண’-’குடி’மகன் !


அடப்போங்கப்பா.... நீங்களும் உங்கள் அரசாங்கமும்!!


~ ப்ரியமுடன்,
பாலா